24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்; கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்
அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு ஆயுதங்களின் கிடங்காக மாறி விட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மட்டும் 10 படுகொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளன.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் குத்திக் கொலை, நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை, மதுபோதையில் இளைஞர் ஒருவர் கொடூரக் கொலை என நீளும் இந்தப் பட்டியலில் கொலையுண்டவர்களில் பாதி பேர் பெண்கள் என்பதும், மீதி கொலைகளின் பிண்ணனியில் போதை இருப்பதும் அறிவாலயத்தின் அலங்கோல ஆட்சிக்கான அவலச் சான்றுகள்.
பழுதடைந்து கிடக்கும் அரசு இயந்திரத்தினால் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது. மக்களுக்கு ஆளும் அரசின் மீது நம்பிக்கை இத்துப்போய் விட்டது. இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நல்லாட்சி என வெற்று விளம்பரங்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் திமுக தலைவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லையா?
ஊர் ஊராக சென்று மக்களின் குறைகளைத் தீர்க்க மனு வாங்குவதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலில் தமிழகத்தில் தினந்தோறும் நடக்கும் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது தெரியாத ஒருவர், தனது ஆட்சியின் அவலங்களை நம்ப மறுக்கும் ஒருவர் முதல்வர் அரியணையில் தொடரலாமா?
அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை இன்று ஆயுதங்களின் கிடங்காகவும் கொலைகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றினால் மட்டுமே இங்கு அறம் மலரும், சமூக நல்லிணக்கம் சாத்தியமாகும்" என தெரிவித்துள்ளார்.