தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் இதுதான் - நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரன், சென்னையில் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்தபோது மாவட்ட பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
தீய விஷயங்களுக்கு காரணம்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழக இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். முதலமைச்சர் தம் வசம் உள்ள காவல்துறையை கட்டுபாட்டுடன் வைத்திருக்கவேண்டும். தமிழக காவல்துறை இப்போது முறையாக எந்த பணியையும் செய்யாமல் இருக்கிறது.
தமிழகத்தில் நடக்கும் வன்கொடுமை போன்ற தீய விஷயங்கள் அனைத்துக்கும் போதைபொருள் புழக்கம் அதிகரித்துள்ளதான் காரணம். டாஸ்மாக் ஊழல், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் போன்றவற்றால் மக்களுக்கு தமிழக அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
திமுக அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தனர். பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று தெரிவிக்கின்றனர். மின்சார கட்டணம் 300 மடங்கு உயர்ந்துள்ளது. சொத்து வரி உயர்ந்துள்ளது. பால் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது.
அனைத்து ஊர்களிலும் கேந்திர வித்யாலயா
ஒரு விஷயத்திற்காக ஒரு நாள் மட்டும் போராட்டத்தை நடத்தி விட்டு செல்வது வெறும் அரசியல் ஆகிவிடும். ஒரு பிரச்சனையை வீடு வீடாக கொண்டு சென்று அதற்கான தீர்வை கொண்டு வருவதே எனது நோக்கம். போராட்டம் நடத்துவதன் மூலம் எந்த ஒரு தீர்வையும் யாராலும் கொடுக்க முடியாது.
எனது பாணியில் அமைதியான முறையில் ஒரு பிரச்னையை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று உரிய தீர்வை அவர்களிடம் பெற்று தருவேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்போது அனைத்து ஊர்களிலும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கு முழு முயற்சி எடுக்கப்படும்.
கொள்கையளவில் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே பல்வேறு மாறுபாடுகள் இருக்கலாம். அதனை சரி செய்வதற்கு குறைந்த பட்ச பொது செயல் திட்டம் தீட்டி அதனை ஆட்சி அமைக்கும் போது ஆலோசனை செய்து முடிவு எடுப்போம்" என பேசினார்.