50 மாணவிகளுக்கு 15 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - மருத்துவர் செய்த கொடூரம்
15 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுமை திறன் பயிற்சி
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 45 வயதுடைய சைக்காலஜி மருத்துவர் ஒருவர் படிப்பு மற்றும் ஆளுமை திறன் தொடர்பாக பயிற்சி அளிப்பதாக 50க்கும் மேற்பட்ட மாணவிகளை கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சந்திரபூர், பண்டாரா மற்றும் கோண்டியா உள்பட பல்வேறு பகுதிகளில் இதற்கான முகாம் நடத்தி பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ஒவ்வொருவரிடமும் ரூ.9 லட்சம் வரை வசூலித்துள்ளார்.
பாலியல் தொல்லை
பயிற்சியின் போது, அக்குபிரஷர் பயிற்சி என கூறி மாணவிகளை தகாத முறையில் தீண்டியுள்ளார். மேலும் போதை அளிக்கும் பானம் ஒன்றை வழங்கி விட்டு, மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை மேம்படுத்தவும் பாலியல் உறவு அவசியம் என அந்த மாணவிகளை மூளை சலவை செய்துள்ளார்.
மேலும் இந்த பயிற்சியின் பெற்றோரிடம் பேசினால் பயிற்சி தடைபடும் என கூறி அவர்களை கட்டுப்படுத்தியுள்ளார். இதனிடையே அந்த மாணவிகளுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு, அந்த படங்களை வைத்து 50மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் பலருக்கும் தற்போது திருமணம் ஆகி விட்டது. இந்த கொடுமையை வெளியே சொன்னால் சமூகத்தில் பெயர் கெட்டு விடும் என அஞ்சி பலரும் அவரின் பாலியல் இச்சைக்கு இரையாகியுள்ளனர்.
கைது
இந்நிலையில் அவரின் 27 வயதான முன்னாள் மாணவி ஒருவர் இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகியுள்ள நிலையில், அவரின் கணவரிடம் புகைப்படங்களை காட்டி விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சைக்காலஜி மருத்துவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மற்றும் தோழியை தேடி வருகின்றனர்.