முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது
முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகை பறிப்பு
மராட்டிய மாநிலம், நாக்பூரின் மனிஷ்நகரில் கடந்த பிப்ரவரி 22 ஆம் திகதி, பைக்கில் வந்த நபர் தன்னுடைய தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றதாக ஜெயஸ்ரீ ஜெய்குமார் காடே என்ற 74 வயது மூதாட்டி புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், நகை பறிப்பில் ஈடுபட்ட மன்காபூரில் உள்ள கணபதிநகரில் வசித்து வரும் கன்ஹையா நாராயண் பௌராஷி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரிடமிருந்து, ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபைல் போன் மற்றும் 10 கிராம் தங்கத் துகள்களை போலீசார் மீட்டுள்ளனர்.
முதல் மனைவிக்கு ஜீவனாம்சம்
அவரிடம் நடத்திய விசாரணையில், இது போன்று 4 நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது.
நீதிமன்ற உத்தவுப்படி, தனது முதல் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஜீவனாம்சம் வழங்குவதற்காக, தான் நகைபறிப்பில் ஈடுபட்டதாக கன்ஹையா வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் அவர் 2வது திருமணம் செய்துள்ளதாகவும், 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருட்டு நகைகளை வாங்கிய காரணத்திற்காக உள்ளூர் நகை வியாபாரியான அமர்தீப் கிருஷ்ணாராவ் நகாடேவும் கைது செய்யப்பட்டுள்ளார்.