பள்ளி மாணவனிடம் கழுத்தில் இருந்த சாமி மாலையை கழற்றச் சொன்ன ஆசிரியர் - நாகர்கோவில் பரபரப்பு
வகுப்பறையில் மாணவனிடம் கழுத்தில் இருந்த சாமி மாலையை ஆசிரியர் கழற்றச் சொன்னதால் மாணவனின் பெற்றோர் பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாமி மாலையை கழற்றச் சொன்ன ஆசிரியர்
நாகர்கோவில் மாநகர பகுதியில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்து வந்தார்.
இதற்காக கழுத்தில் சாமி மாலை அணிந்து, காதில் கம்மல், காலில் கொலுசு அணிந்து பள்ளிக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் ஒருவர் மாணவன் அணிந்திருந்த மாலை மற்றும், கம்மல், கொலுசு ஆகியவற்றை கழற்றுமாறு கண்டித்துள்ளார். ஆனால், மாணவனோ விரதம் இருந்து வருவதால், அதை கழற்ற மறுத்திருக்கிறார். இதனால், அந்த ஆசிரியர் வகுப்பறையிலிருந்து அந்த மாணவனை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு சென்ற மாணவன் இது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே, மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவைலத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.