விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்ற சமந்தா - பதிலளிக்காமல் நழுவிய நாகார்ஜூனா
திரையுலகின் நட்சத்திர ஜோடியான சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த 2010 ஆம் ஆண்டு யே மாயா சேசவே என்ற தெலுங்கு படத்தில் நாகசைதன்யாவுடன் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் 7 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இருவருக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்னர் 2017ஆம் ஆண்டு அக்டோபரில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா தனது கணவரை பிரிய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனி என்ற குடும்ப பெயரை நீக்கினார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் தி பேமிலி மேன் வெப் சீரிஸில் நடிகை சமந்தாவின் கேரக்டருக்கு வீட்டில் எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறப்பட்டது.
ஊடகங்களில் வெளியான தகவலுக்கு சமந்தா மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகரும், சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவின் செயல்பாடு குடும்பத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். அவர் ஊடகங்களை சந்திப்பதில் இருந்தும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதில் இருந்தும் விலகியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் ஒரு காரணம் என்றாலும், சமந்தா மற்றும் நாக சைதன்யா குறித்து பரவி வரும் விவாகரத்து தொடர்பான கேள்விகளை தவிர்க்கவே நாகார்ஜூனா மீடியாவை தவிர்ப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே சமந்தா ஜோடி விவாகரத்து கேட்டு கோர்ட்டு படி ஏறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாகார்ஜூனாவின் இந்த நடவடிக்கை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.