தமிழ்வழிக் கல்விக்காக போராடிய நாகாலாந்து மாணவி - அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்ப்பு!
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாகாலாந்து மாணவியை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளனர்.
மாணவி அக்ம்லா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த ரூத் என்பவர் ஹிந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 13 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார்.
அதே பள்ளியில் அவரது மகள் அக்ம்லா 8-ஆம் வகுப்பு வரை படித்து வந்துள்ளார். இதனிடையே கொரோனா காலகட்டத்தில் தனது மகளை நாகாலாந்துக்கு அனுப்பி வைத்துள்ளார் ரூத். அங்கு 10-ஆம் வகுப்பு வரை படித்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சிங்கம்புணரிக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து அவரை சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்க அவரது தாய் ரூத் முயன்றுள்ளார். அப்போது அக்ம்லா 10-ம் வகுப்பு முடித்ததாக கூறியதால், பள்ளி நிர்வாகம் குடிபெயர்வு, உண்மைத் தன்மை சான்று கேட்டனர். ஆனால், அந்த சான்றுகளை நாகாலாந்தில் பெற முடியாததால் அக்ம்லாவை பள்ளியில் சேர்ப்பதில் குழப்பம் நீடித்தது. இதனால், பள்ளியில் சேர முடியாமல் தவித்த அவர், இதுகுறித்து செய்தியாளர்கள் வழியாக கோரிக்கை வைத்தார்.
பள்ளியில் இடம்
இதை பார்த்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அக்ம்லாவை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து மாணவி அக்ம்லாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை பள்ளியில் சேர இடம் அளித்தார்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று 11-ஆம் வகுப்பில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்ம்லா "பள்ளியில் சேர்வதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நான் தடையின்றி 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுதுவதற்கு தமிழக அரசு, தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் எனது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகியோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நான் பிறந்தது நாகலாந்து என்றாலும் இங்கு இருந்ததால் எனக்கு இந்த ஊர் பிடித்துவிட்டது. எல்லா மொழிகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், எனக்கு மிகவும் பிடித்த மொழியாக தமிழ் இருக்கிறது. எனக்கு தமிழ் படிக்கவும், எழுதவும் தெரியும். அதனால் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மீண்டும் நாகாலாந்தில் இருந்து வந்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.