நாகாலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 13 அப்பாவி மக்கள் உயிரிழப்பு

civilians nagaland shot dead indian army myanmar border
By Thahir Dec 05, 2021 11:26 AM GMT
Report

நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மியான்மர் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள நாகாலாந்து மோன் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, டிரு-ஓடிங் என்ற சாலையில் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 13 பழங்குடியின மக்கள் உயிரிழந்தனர். தவறுதலான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் மிகுந்த வருத்தம் அளிப்பதாக இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது,

“கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் குறித்து கிடைந்த நம்பகமான உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், நாகாலாந்து, மோன் மாவட்டத்தில் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், அதன் பின் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கக் கூடியது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து உயர்மட்ட அளவில் விசாரிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த சம்பவத்தில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த பலர் மோசமான காயம் அடைந்ததாகவும், படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக” தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “இந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.

நாகாலந்து மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ கூறுகையில், “இந்த சம்பவம் துர்திஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.