பாஜக வேல் யாத்திரையால் தான் ஸ்டாலின் வேல் ஏந்தியுள்ளார்: ஜே.பி.நட்டா

dmk bjp congress aiadmk nadda
By Jon Apr 03, 2021 01:14 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ இது புண்ணிய பூமி. கலாச்சாரம் நிறைந்த ஊர். மீண்டும் நமது கூட்டணி ஆட்சிக்கு வரும். மோடி உலகின் எந்த ஊருக்கு சென்றாலும் தமிழ் மொழியை பற்றியும், அதன் கலச்சார பெருமைகளைப் பற்றியுன் பேசி வருகிறார்.

ஐ.நா சபையில் கூட ’யாதும் ஊரே. யாவரும் கேளிர்’. எனப் பிரதமர் பேசியுள்ளார். இந்த வார்த்தை நம்மை ஒன்று சேர்க்க்கூடிய வார்த்தை. மத்திய அரசாங்கம் நாட்டிற்கான அரசாங்கம். நாம் வெல்லக்கூடிய கூட்டணி. திமுக – காங்கிரஸ் கூட்டணி குடும்பத்தை மட்டும் முன்னெடுத்து செல்லக்கூடியவர்கள்.

ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் 2 முறை நிராகரித்துள்ளார்கள். மூன்றாவது முறையாக தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணியை நிராகரிப்பார்கள். திமுக , காங்கிரஸ் கூட்டணி ஊழல், கட்டப்பஞ்சாய்த்து நிறைந்தது. தினம் தினம் பெண்களுக்கு எதிராக திமுக பேசி வருகின்றனர். பட்டியலின பெண்களுக்கு எதிராகவும் மோசமாக பேசி வருகின்றனர்.

இதன் அர்த்தம் திமுக கூட்டணியினர் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். தமிழர்களுக்கு எதிரான கூட்டணி திமுக கூட்டணி. ஜல்லிக்கட்டை தடை செய்த்தது காங்கிரஸ்தான். ஜல்லிக்கட்டு மசோதாவை எதிர்க்காமல் இருந்தது திமுக. ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்த உண்மையான கதாநாயகனாக மோடி விளங்கி வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டனர். தற்போது இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் நீண்ட கால கோரிக்கையான தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேற்றப்பட்டது. பாஜக நடத்திய வேல் யாத்திரைதான் கடவுள் மறுப்பு கொள்ளை கொண்ட ஸ்டாலின் தற்போது மேடைகளில் வேல் முன்னிருத்தி பரப்புரை செய்கிறார்.” என்றார்