வலுத்த எதிர்ப்புகள்...ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் சீமான் நேரில் ஆஜர்..!!
அருந்ததியினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இன்று நாம் தமிழர் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருக்கின்றார்.
அருந்ததியினரை வந்தேறிகள் என்ற சீமான்
கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலின் பரப்புரையில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியின மக்களை வந்தேறிகள் என குறிப்பிட்ட நிலையில், கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரமே செய்ய முடியாத அளவு எதிர்ப்புகள் வலுத்தன. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சீமானுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன.
நேரில் ஆஜரான சீமான்
இதனை தொடர்ந்து சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகக் கூறி சீமானுக்கு ஈரோடு கருங்கல்பாளைய போலீசார் சம்மன் அனுப்பினர்.
மேலும் அந்த சம்மனை சீமான் பெற்றுக்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது இருநபர் உத்தரவாதத்துடன் ஜாமீன் கோரி சீமான் தரப்பு மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அவருடன் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.