பொதுமக்களிடம் மோசடி செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி அதிரடி கைது

By Thahir Feb 21, 2023 02:53 PM GMT
Report

சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் இலவச பட்டா வாங்கித் தருவதாகக்கூறி பொது மக்களிடம் மோசடி செய்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையாறு மீனவ கிராமத்தில் 10,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியின்போது கிராமத்தில் வசித்த மக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியிருந்த இடங்களை தற்போது வீடில்லாத மக்களுக்கு வீட்டுமனையாக பிரித்து வழங்க வேண்டும் என கிராமத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கிராமத்தில் உள்ள மீனவ மக்களிடம் இலவச வீட்டுமனை பட்டா வாங்கித்தருவதாக கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரான செண்பகசாமி மற்றும் அண்ணாதுரை ஆகியோர் 40க்கும் மேற்பட்டோரிடம் தலா 20,000 பெற்று மோசடி செய்து ஏமாற்றியதாகவும், சிலருக்கு போலி பட்டா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

Naam Tamilar Party executive arrested for fraud

மேற்கண்ட இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி பழையாறு மீனவர்கள் கடந்த 17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும், போலியாக பட்டா தயார் செய்ததாகவும் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் செண்பகசாமியை புதுப்பட்டினம் போலீஸார் நேற்று மாலை கைது செய்து சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

செண்பகசாமியை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து செண்பகசாமி இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக அண்மையில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் மக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.