ஐடி துறையில் கை நிறைய சம்பளம்: வேலையை உதறிவிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவது ஏன்?

seeman ntk job T Nagar
By Jon Mar 28, 2021 03:15 AM GMT
Report

ஐ.டி துறையில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்த சிவசங்கரி, தற்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து சென்னை தியாகராய நகரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

குறிப்பாக இதில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்களை சீமான் நிறுத்தியுள்ளார். இதில் சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட வடபழனி பகுதியில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாம, எளிமையாக வீதி வீதியாக சென்று, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவசங்கரி ஈடுபட்டு வந்தார். 

திருச்சியை சேர்ந்த 33 வயதான இவர், தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஐடி துறையில் கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், இப்படி வீதி வீதியாக சென்று கஷ்டப்படுவது ஏன்? அழகாக சம்பளத்தை வாங்கினோமா நிம்மதியாய் இருந்தோமா இல்லாமல் ஏன் இப்படி ஒரு முடிவு என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ஒரு மாற்றத்தை நம்மைப் போன்ற இளைஞர்களால் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரசியலுக்கு வந்ததாக கூறுகிறார். ஏனெனில் இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் மீது கடும் வெறுப்பு இருப்பதாக கூறும் இவர், இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது இளைஞர்களின் கையில் ஆட்சியும், அதிகாரமும் நிச்சயம் வந்து சேரும். பண பலமும் படைபலமும் மட்டுமே அரசியல் என்பதை தாண்டி மக்கள் நலன் சார்ந்த அரசியல் நிச்சயம் வந்தே தீரும் என்று நம்பிக்கையோடு இறங்கியதாக கூறுகிறார்.

காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி வீதியாக வீடு வீடாக சென்று வாக்கு கேட்கிறார். வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் கவலையில்லை. அரசியலுக்கு வந்துவிட்டேன், இனிமேல் தொடர்ந்து அரசியலில் பயணிப்பேன். என்னைப்போன்ற இளைஞர்கள் பலரை அரசியலுக்கு கொண்டு வருவேன் என்று கூறி முடித்தார்.