நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலம் மீது கற்கள், பாட்டில் வீச்சு..நிர்வாகிகளிடையே கடும் மோதல் - சென்னையில் பரபரப்பு..!
சென்னையில் நாம் தமிழர் கட்சி - ஆதி தமிழர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
சென்னை சின்ன போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆதி தமிழர்கள் அருந்ததியர்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதி தமிழர் கட்சியினர் முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து ஆதி திராவிடர் கட்சியினர் ஜக்கையன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
நிர்வாகிகள் இடையே மோதல்
அப்போது அங்கு காத்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருந்த போதும் போலீசாரின் தடுப்பை மீறிய ஆதி திராவிடர் கட்சியைச் சேர்ந்த 10 பேர் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கற்களை வீசினர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு வந்து ஆதி திராவிடர் கட்சி தொண்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியதால் அந்த இடமே கலவரம் பூமி போல் காட்சி அளித்தது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் கைது செய்துள்ளனர்.