இந்த சந்தேகம் இருந்தால் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டாம்: சீமான்
நாம் தமிழருக்கு ஓட்டு போட்டால் பாஜக வெற்றி பெறும் என சந்தேகம் இருந்தால் யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மேலப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது; நாட்டில் ஊழல் லஞ்சத்தை தவிர வேறு எந்த நிர்வாகமும் இல்லை, பிறப்பு சான்றிதழ் பெறுவது முதல் இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை அனைத்தும் ஊழல் தான். இங்கு அனைத்துமே மக்களுக்கு பிச்சை இடப்படுகிறது, யார் பணத்திலிருந்து மக்களுக்கு இலவசம் கொடுக்கிறார்கள் என்பது தான் பிரச்சனை.
இலவசங்கள் கொடுப்பதால் இழக்கும் பணத்தை அவர்கள் எங்கிருந்து எடுக்கிறார்கள்? என் மக்களிடத்தில் இருநது தான் எடுக்கிறார்கள், நகை கடன் தள்ளுபடி செய்கிறார்கள். நகைகளை அடமானம் வைக்கும் நிலைக்கு ஏன் மக்களை தள்ளுகிறார்கள்? கடன் தள்ளுபடியை ஏன் கடந்த ஆண்டோ அதற்கு முந்தைய ஆண்டோ தள்ளுபடி செய்யவில்லை. தேர்தல் வரும்போது ஏன் அவசர அவசரமாக அறிவிக்க வேண்டும், இது எவ்வளவு மோசமான ஒரு லஞ்சம் இலவசத்தால் மக்களை வாழவைக்க முடியும் என்று நினைப்பது எவ்வளவு அவமானம்.
நாட்டில் எங்கு பார்த்தாலும் தனியார் கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் என தனியார் மயமாகி விட்டது, நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்ற வேண்டும். அதற்காக தான் சிந்தனையற்ற அரசியல் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறோம், வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு தனித்து போட்டியிடுகிறோம்.
திமுக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலர்கள் நாங்கள் தான் என சொல்கிறது முதலில் சிறுபான்மையினர் யார் என்பதை பார்க்க வேண்டும், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர், அப்போது என்றால் அவர்கள் தான் அங்கே பெரும்பான்மையினர் அங்கு இந்துக்கள் சிறுபான்மை என்பதை ஒத்துக் கொள்வார்களா? கருணாநிதி ஜெயலலிதா இவர்கள் தான் மொழி சிறுபான்மையினர் நாங்க தான் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம், காரைக்குடியில் எச்.ராஜாவுக்கு ஒரே வீடு தான் உள்ளது, அவர் பெரும்பான்மை ஆகிவிடுவாரா என்னை தாண்டி தான் இந்த மண்ணில் யாரும் வர முடியாது.
அதற்கு வாய்ப்பில்லை ராஜா சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலர் என்று கூறுபவர்கள் இஸ்லாமியர்களுக்கு வெறும் இரண்டு இடங்கள் தான் கொடுத்துள்ளார்கள், நான் 14 இடம் கொடுத்துள்ளேன், மதம் பார்த்து சாதி பார்த்து எனக்கு யாரும் ஓட்டுப் போட வேண்டாம். நாங்கள் தமிழர்கள் என்று உணர்ந்து ஓட்டு போட்டால் போதும், சீமானுக்கு ஓட்டு போட்டால் வாக்குகள் பிரிந்து விடும் பாஜக வந்து விடும் என்று பயமுறுத்துவார்கள், அதுபோன்று சந்தேகப்படுபவர்கள் யாரும் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம்.
சீமான் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் வரை பாஜக வரவே முடியாது என்று நம்புவர்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும், சிஏஏ போன்ற சட்டங்களை கொண்டுவந்தது காங்கிரஸ் திமுக கட்சிகள் தான், அதை செயல்படுத்தியது பாஜக.
அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் அவர்கள் திணறினார்கள், இவர்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் செயல்படுத்தி விட்டனர், முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து இங்கே இருப்பவர்கள் யாரும் பேசவில்லை காங்கிரஸ் கட்சியும் திமுகவும் அதை எதிர்த்துப் பேசவில்லை, இது ஒரு மாறுதலுக்கான தேர்தல் எனவே எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சீமான் பேசினார்.