பட்டாம் பூச்சி விற்பவன் - பறந்தாலும் பாடல்களில் வாழும் எதார்த்தக் கவிஞன் நா.முத்துக்குமார்.!
எளிய வார்த்தைகளை பிரம்மாண்டமாக வசப்படுத்திய சகாப்த கலைஞன் நா.முத்துக்குமாரின் பிறந்த நாள் இன்று(12 ஜூலை).
நா.முத்துக்குமார் கால் பதிக்காத இடமே இல்லை. கவிஞராக மட்டும் வலம் அறியப்பட்டவரல்ல... உதவி இயக்குனர், பாடலாசிரியர், வசனகர்த்தா, நாவல் ஆசிரியர் என வலம் வந்தவர்.
12 ஆண்டுகளில் 1500கும் மேற்பட்ட பாடல்கள், தொடர்ந்து 2 தேசிய விருது, 10க்கும் மேற்பட்ட புத்தகம், என 41 வயதிற்குள் என்ன செய்ய முடியுமோ அந்த அளவிற்கு சாதனைகளாக முடித்தார். அவர் வானில் பறந்தாலும் அவரது பாடல்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. கொண்டிருக்கும்!
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என தந்தைக்கும் தாலாட்டு கொடுத்தவர்.
தோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில் பாவியாய் என் மனம் பாழாய் போகும் போகும் என தான் செய்வது தவறா? சரியா?என தவிக்கும் ஒரு இளைஞனின் மனநிலையை இதைவிட சிறப்பாக எப்படி சொல்லிவிடமுடியும்?
தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை என கொண்டாடி தீர்த்திருப்பார்.
நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு.. கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு என அழகுக்கு புது இலக்கணம் கொடுத்தார். அதற்காக அவருக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது.
தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாது தாவிவந்து சில விருப்பங்கள் குதிக்கும் தடுத்திடவும் இங்கு வழி இல்லையே.. காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
கதைப்பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்! என்று மெளனத்தின் ஆழத்தை அறியச் செய்தார்.
இது கத்தியில் நடந்திடும் பருவம் தினம் கனவினில் அவரவர் உருவம் சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் என காதலை திகட்ட திகட்ட அள்ளித் தந்தார்.
உனக்கும் எனக்கும் பிடித்த பாடல் தேனீர் கடையில் பாடிக்கொண்டிருக்கிறது கடைசி பேருந்தினை விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது காதல் - இதைவிடவெல்லாம் முதல்காதலுக்கு ஓர் அர்த்தம் வேண்டுமா? காதலின் அனைத்து கோணங்களையும் தொட்ட அவர், மற்ற உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் அதே அழகியலை கொடுத்தார்.
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது ஒவ்வொருவரின் வலிக்கும் மருந்து போட்டுக்கொண்டிருக்கிறார்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்... மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது இல்லை என்று... தந்தையின் அன்பை வார்த்தைகளில் பரிசளித்ததற்கு தேசிய விருதை வென்றார்.
காதல் உணர்வுகளை வார்த்தைகளாய் கொடுத்தவர், உறவின் வலிகளை உணர வைத்தவர், எளிய வார்த்தைகளால் ரசிக்க வைத்தவர். அழியா பாடல்களையும் கொடுத்த எதார்த்த கலைஞன்! உடலுக்கு தானே இழப்பு பாடலுக்கு இல்லையே...
நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்குறீர்கள் முத்துக்குமார்.
நம்முடைய புன்னகையில், நம்முடைய கண்ணீர் துளியில், நம்முடைய கனத்த மெளனத்தில் என்றுமே நம்முடன் இசை இருக்கிறது - நா.முத்துக்குமார்