திருமணம் செய்ய இருந்த இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு - அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்
விருதுநகர் அருகே அடுத்த வாரம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் சுந்தரசெல்வம் மேட்டமலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் சுந்தரசெல்வம் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த உறவினர்கள் தீயை அணைத்த நிலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகலறிந்து சம்பவ இடத்திற்கு சாத்தூர் நகர் போலீசார் விரைந்து வந்து சுந்தரசெல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடந்த நிகழ்விற்கு தீராத வயிற்றுவலிதான் காரணம் என்று கூறப்பட்டாலும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் உறவினர்களிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.