பிரபல செய்தி தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து மர்ம நபர் தாக்குதல்
சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் புகுந்து மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு காரில் வந்த நபர் ஒருவர் வந்துள்ளார். உள்ளே சென்ற அவர் தான் கொண்டு வந்திருந்த கிட்டார் பையில் மறைத்து வைத்திருந்த 3 அடி வாள் மற்றும் தடுப்பு கேடயம் ஒன்றை வைத்து கண்ணாடிகளால் ஆன கதவு மற்றும் வரவேற்பறையில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்.
உடனடியாக தகவலறிந்து வெளியே ஓடிவந்த ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் போலீசார் மர்ம நபரை பிடித்து சென்று விசாரித்ததில் அந்த நபர் கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மகன் ராஜேஷ்குமார் என்பது தெரிய வந்தது.
மேலும் ராஜேஷ் குமாரின் தந்தை தர்ம லிங்கத்திற்கும் தொலைக்காட்சியின் உரிமையாளர்களுக்கும் தனிப்பட்ட பகை இருந்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த தாக்குதல் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.