கடலுக்கு அடியில் கிடைத்த "தங்க முட்டை"...ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்..!!
கடலுக்கு அடியில் காணப்பட்ட மர்மமான "தங்க உருண்டை" அல்லது "தங்க முட்டை" ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது விஞ்ஞானிகளையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
NOAA ஆராய்ச்சி
அமெரிக்க அரசாங்க துறைகளில் ஒன்றான தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் அதாவது NOAA எனப்படுவது, வானிலை கண்காணிப்பு, ஆழ்கடல் ஆய்வு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த NOAA'வின் கப்பலான Okeanos Explorer-ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இந்த மர்மமான பொருளை கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அலாஸ்கா கடற்கரையில் இருந்து 250 மைல் தொலைவில் கடலுக்கடியில் அழிந்துபோன எரிமலையைப் பார்க்க சென்ற போது இந்த மர்மமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.=
மர்மமான தங்க முட்டை
கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,300 மீட்டர் ஆழத்தில் நீர்முழ்கி கப்பலின் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளமுற்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருள் முதலில் "மஞ்சள் நிறத்திலான தொப்பி" என்றே அவர்கள் நினைத்துள்ளனர்.
சுமார் 10 சென்டிமீட்டர் அளவிலான இந்த மர்ம பொருள் வெள்ளை கடற்பாசிகளுக்கு நடுவே பாறை ஒன்றில் இறுக்கமாக ஒட்டியபடி இருந்துள்ளது. இந்த மர்ம பொருள் இறந்த கடற்பாசியாகவோ, பவளப்பாறையாகவோ அல்லது ஒரு கடல் விலங்கின் முட்டை உறை வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.