பெண்ணை துரத்திய மர்ம விலங்கால் பரபரப்பு - வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தாண்டாம்பாளையம் செங்காளி காட்டுபுதூர் பகுதியை சேர்ந்த அனிதா மற்றும் அவரின் மகள் யாழினி தாண்டாம் பாளையம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று இரவு 7.30 மணிக்கு ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியைக் கடந்தபோது 2 அடி உயரமுள்ள மர்ம விலங்கு ஒன்று இவர்கள் பயணித்த ஸ்கூட்டரை பின்தொடர்ந்து வந்துள்ளது. இதனால் பயந்து போன இருவரும் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர்.
விடாமல் துரத்தி வந்த அந்த மர்ம விலங்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றவுடன் எதிரே ஒரு கார் வருவதை கண்டு அருகில் இருந்த கரும்பு காட்டுக்குள் சென்றுள்ளது.
இந்நிலையில் மர்ம விலங்கு நடமாடுவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர் இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்தரநாத் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ஊஞ்சகாட்டு வலசு மற்றும் செங்காளிகாட்டுபுதூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் பகுதியில் மர்ம விலங்கு சென்ற கால் தடங்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,
சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகள் இருக்க வாய்ப்பு குறைவு இருப்பினும் இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வனத்துறை அலுவலர்கள் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீவிரமாக கண்காணிப்பார்கள் என்று தெரிவித்தனர்.