இயக்குநர் மிஷ்கினின் திருநங்கைகள் தொடர்பான கோரிக்கை - உடனே நிறைவேற்றிய RK செல்வமணி!
இயக்குநர் மிஷ்கின் வைத்த கோரிக்கையை உடனடியாக பெப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி நிறைவேற்றியுள்ளார்.
டெவில் திரைப்படம்
இயக்குநர் மிஷ்கினின் சகோதரரான ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தின் மூலம் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் மிஷ்கினின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெற்றிமாறன், பாலா, கதிர், வின்சென்ட் செல்வா மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், பெப்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மிஷ்கினின் கோரிக்கை
அப்போது பேசிய மிஷ்கின் திருநங்கைகளை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து மேடையில் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே செல்வமணி "மிஷ்கினின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும், அவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.