தம்பதி கொலை வழக்கு : வீட்டு ட்ரைவர் கொலையாளியாக மாறியது இப்படி தான்; அதிர வைக்கும் தகவல் !
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-அனுராதா தம்பதி அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு அவரது வீட்டிலேயே அவரது கார் ஓட்டுநரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பட்டய கணக்காளரான ஸ்ரீகாந்த்திற்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவிலேயே குடியேறியதால் வயதான இருவரும் சென்னையில் தனியாக வசதித்து வந்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அமெரிக்கா சென்று அங்கேயே 3 மாதம் தங்கியிருந்து குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் காலத்தை கடத்தி வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்கா சென்றிருந்த தம்பதியினர் கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30மணிக்கு சென்னை திரும்பினர். காலை 10 மணி கடந்தும் இருவரும் போன் எடுக்காமல் இருந்தததாலும், இருவரது போன்களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படிருந்ததாலும் அமெரிக்காவில் உள்ள மகன் சஸ்வத்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வீட்டு வேலைக்காரரான கிருஷ்ணாவைக் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் முரணாக பதிலளித்ததால் தனது நண்பர் ஸ்ரீநாத்துக்கு தகவல் கொடுத்து பார்க்கச் சொல்லியிருக்கிறார் சஸ்வத். அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் டிரைவர் உள்பட யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து நேரடியாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தம்பதி வசித்துவந்த வீட்டிற்கு விரைந்த போலீசார் ஆய்வு செய்த்ததில் ஸ்ரீகாந்த்-அனுராதா தம்பதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துரித படுத்தினர். இதற்கிடையே தம்பதி வசித்த வீட்டில் இருந்து காணாமல் போன இன்னோவா கார் ஆந்திராவை நோக்கி செல்வது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஆந்திரா போலீசாரின் உதவியுடன் இன்னோவா காரை மடக்கிப் பிடித்து அதில் பயணம் செய்த கிருஷ்ணா மற்றும் ரவி ராயை ஆந்திரா போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஸ்ரீகாந்த், அனுராதா தம்பதியினரை கொலை செய்துவிட்டு 8 கிலோ தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருட்களுடன் தப்பியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே பண்ணை வீட்டில் கொலை செய்த பின் இருவரையும் புதைப்பதற்கான குழியையும் தோண்டி வைத்திருக்கின்றனர் லால் கிருஷ்ணா மற்றும் ரவி ராய்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சைதாப்பேட்டை 23-வது பெருநகர குற்றவியல் நீதிபதி கெளதமன் முன்பு நேற்று நள்ளிரவு ஆஜர்படுத்திய மயிலாப்பூர் போலிஸார் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
பண்ணை வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட இருவரது உடல்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தம்பதியை கிரிக்கெட் மட்டை, கத்தியால் தாக்கி கொடூரமாக கொலை செய்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய கார் டிரைவர் கிருஷ்ணா கொலையாளியாக மாறியது எப்படி என்ற பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொலையாளியாக மாறியுள்ள கிருஷ்ணாவின் குடும்பத்துக்கும் ஸ்ரீகாந்த் குடும்பத்துக்கும் 20 ஆண்டு காலமாகவே நல்ல உறவு இருந்து வந்துள்ளது. தற்போது 75 வயதான கிருஷ்ணாவின் தந்தை லால் சர்மா மாமல்லபுரம் சூலேரிக்காடு பகுதியில் உள்ள டால்பின்சிட்டி பொழுது போக்கு பூங்காவில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது பூங்கா திடீரென மூடப்பட்டதையடுத்து மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் லால் சர்மா தவித்துள்ளார். 4 குழந்தைகளில் மூத்த மகன்தான் தற்போது கொலையாளியாக மாறி இருக்கும் கிருஷ்ணா. மற்ற 3 பேரில் இருவர் பெண் குழந்தைகள். இன்னொருவன் கிருஷ்ணாவின் தம்பி. வேலை போய் விட்ட நிலையில் வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்த லால் சர்மா குடும்பத்துக்கு ஸ்ரீகாந்த் வழிகாட்டி உள்ளார்.
பண்ணை வீட்டுக்கு சென்று லால்சர்மா வேலை கேட்ட போது ஸ்ரீகாந்த் பாவம் பார்த்து வேலை கொடுத்துள்ளார். இதையடுத்து லால்சர்மா பண்ணை வீட்டிலேயே தங்கி இருந்து வீட்டை பார்த்துக் வந்துள்ளார். அப்போதில் இருந்தே சிறுவனாக இருந்த டிரைவர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினான். கிருஷ்ணாவுக்கு திருமணமாகி மனைவியும், 15 வயதில் மகனும் உள்ளனர். அவர்கள் நேபாளத்தில் வசித்து வருகிறார்கள்.
டிரைவர் கிருஷ்ணா, ஸ்ரீகாந்தின் குடும்பத்தினரோடு நெருக்கமாக பழகி வசதி வாய்ப்புடனேயே வாழ்ந்து வந்துள்ளான். ஸ்ரீகாந்த் குடும்பத்தினரும் கிருஷ்ணாவை தங்களது மகன் போலவே பார்த்துள்ளனர். அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மயிலாப்பூரில் உள்ள வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். ஸ்ரீகாந்தின் பங்களா வீட்டில் கிருஷ்ணாவுக்கு தனி அறையையும் ஒதுக்கி கொடுத்து இருந்தனர்.
ஸ்ரீகாந்தின் தந்தை ராஜகோபால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துள்ளார். இந்நிலையில் அவர் டிரைவர் கிருஷ்ணாவிடம் வீட்டில் நடக்கும் அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். ஸ்ரீகாந்தின் மயிலாப்பூர் வீட்டில் நிறைய பணம் உள்ளது என்றும் நகைகள் உள்ளது என்றும் அவரின் காலத்துக்கு பிறகு ஸ்ரீகாந்துடனேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கிருஷ்ணாவிடம் கூறி இருக்கிறார்.
இது போன்று வீட்டில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் கிருஷ்ணாவிடம் தெரிவித்து வந்துள்ளனர். சொத்து விற்றது தொடர்பாக கிடைத்த ரூ. 40 கோடி பணம் பற்றியும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவிடம் கூறி உள்ளார்.
இதனால், எத்தனை நாள்தான் டிரைவராகவே இருப்பது? என்று எண்ணிய கிருஷ்ணாவுக்கு எப்படியாவது வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியிருக்கிறது. அப்போதுதான் ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் கொன்று விட்டு வீட்டில் இருக்கும் நகை-பணத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணமும் கிருஷ்ணாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற டார்ஜிலிங்கைச் சேர்ந்த நண்பர் ரவிராயை துணைக்கு அழைத்துள்ளார். இப்படி 3 மாதங்களுக்கு முன்பே கொலை சதி திட்டத்தை அரங்கேற்றிய கிருஷ்ணா அமெரிக்கா சென்றிருந்த ஸ்ரீகாந்தும், அனுராதாவும் சென்னைக்கு திரும்பும் நாளில் தீர்த்துக் கட்டும் எண்ணத்தோடு அந்த நாளுக்காக காத்திருந்துள்ளான்.
இதன்படி கணவன்- மனைவி இருவரையும் கிருஷ்ணாவும் அவனது நண்பனும் கொன்று புதைத்துள்ளனர்.