20 பேர் சுட்டுக்கொலை - மியான்மர் இராணுவம் வெறிச் செயல்
மியான்மரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சியின் பெரும்பான்மையான இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மியாண்மர் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றூக்கணக்கானவர்களை இராணுவம் சுட்டுக் கொலை செய்தது.
மேலும், ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பல்வேறு கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். இந்த கிளர்ச்சியாளர்களும் ராணுவத்தினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் ராணுவம் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனை அடுத்து மியான்மரில் உள்ள ஹஸ்வீ எனும் கிராமத்தில் கிளர்ச்சியாளர் ஒருவரை மியான்மர் ராணுவத்தினர் நேற்று கைது செய்தனர்.
எனவே அந்த நபரை விடுவிக்கும் படி, கிராம மக்கள் இணைந்து ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் அந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 20 கிராம மக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.