ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் மியான்மர்: முக்கிய அரச தலைவர்கள் சிறைப்பிடிப்பு
மியான்மார் நாட்டின் ஸ்டேட் கவுன்சிலர் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து, அந்நாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மியான்மரில் நவம்பர் 2020-ல் நாட்டின் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னதாக அரசு தலைவராக (State Counsellor) தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி மீண்டும் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் National League for Democracy கட்சி முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக இராணுவம் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அவரையும் மற்ற NLD தலைவர்களையும் இன்று அதிகாலை இராணுவம் சிறைபிடித்தது.
அவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மியான்மர் நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை இராணுவம் உறுதிப்படுத்தியது. இராணுவ தளபதி மின் ஆங் ஹ்லேங்கிற்கு அதிகாரத்தை ஒப்படைப்பதாக இராணுவம் கூறியது.
மேலும், தலைநகரான நேய்பிடாவ் மற்றும் முக்கிய நகரமான யாங்கோனின் தெருக்களில் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பர்மா என்றும் அழைக்கப்டும் மியான்மர் 2015-ஆம் ஆண்டு வரை பல சகாப்தங்களாக இராணுவ ஆட்சியில் இருந்தது.
பின்னர் 2015-ஆம் National League for Democracy கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், ஆங் சான் சூகிக்கு வேறு நட்டு குடியுரிமை கொண்ட குழந்தைகள் உள்ளதால் மியான்மரின் அரசியமைப்பின் படி அவர் அப்பதவியை ஏற்க முடியவில்லை.
அதனால், புதிதாக உருவாக்கப்பட்ட அரசு தலைவர் (State Counsellor) என்ற பதவியை அவர் ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.