மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தீவிர போராட்டம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ஆட்சி நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதை எதிர்க்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மியான்மரில், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சன் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது.
இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஆளும் கட்சி வெற்றி பெற்றதாக, ராணுவம் குற்றம் சாட்டியது.இந்நிலையில், சமீபத்தில், ஆங் சன் சூச்சி உள்ளிட்டோரை சிறை பிடித்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதை எதிர்த்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். '
போராட்டத்தில் ஈடுபட்டால், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. யாங்கூன், மாண்டலே, தலைநகர் நேபியிதா உட்பட பல நகரங்களில் நேற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். '
மியான்மரில் நடக்கும் போராட்டங்களில் இருந்து, ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது தெரிய வருகிறது. அதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு' என, மியான்மருக்கான அமெரிக்க துாதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.