அதிகாரத்தை அரசிடம் ஒப்படையுங்கள்: மியான்மர் இராணுவத்துக்கு அமெரிக்க எச்சரிக்கை

president usa biden
By Jon Feb 08, 2021 06:28 AM GMT
Report

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ள ராணுவம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மியான்மர் பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி பெருவெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியுள்ளது.

நெருக்கடி நிலை ஓராண்டிற்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வியாழக்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில், ஒருபோதும் மக்களின் விருப்பத்தை மீறவோ அல்லது நம்பகமான தேர்தலின் முடிவை மாற்றவோ முயற்சிக்கக்கூடாது என தெரிவித்த பைடன் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினார்.

முன்னதாக மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.