‘’எனக்கு திமிரெல்லாம் கிடையாது , எல்லாம் என்னோட கெட்ட நேரம் ‘’: விளக்கம் கொடுக்கும் நடிகர் அஸ்வின்

actor ashwinkumar
By Irumporai Dec 08, 2021 08:14 AM GMT
Report

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன்.

40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார். அஸ்வினின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையானது. கடந்த 2 நாட்களாக மீம்ஸ், வீடியோ மூலமாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு அஸ்வின் அளித்துள்ள பேட்டியில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் : ''அது நான் கலந்துகொண்ட முதல் பெரிய நிகழ்வு என்பதால் நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். நான் என்ன பேசவேண்டும் என்று தயார் செய்துகொண்டும் செல்லவில்லை

ரசிகர்கள் அங்கு என் மீது பொழிந்த அன்பில் என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை. என்னிடம் கதை சொன்ன எந்தவொரு இயக்குநரையும் அவமதிக்க வேண்டும் என்கிற நோக்கம் எனக்கில்லை.

நான் பேசியது இந்த அளவு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அதற்குப் பின்னாலிருக்கும் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அதில் எந்த நோக்கமும் இல்லை. நான் கதைகளின் எண்ணிக்கையைச் சற்று மிகைப்படுத்திச் சொல்லிவிட்டேன்.

சந்தோஷத்திலும், மேடையில் பேசும் பதட்டத்திலும் இருந்தேன். கை, கால் நடுங்கிக் கொண்டிருக்கும்போது திமிராக எப்படி பேச முடியும். எனக்கு திமிர் எல்லாம் இல்லை.

நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். படம் நல்லா வரலைனா ரிலீஸ் பண்ண விடமாட்டேன் ஹரினு நான் இயக்குநரிடம் ஜாலியாக சொன்னதும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

நான் சாதித்த பிறகும் கூட ஆணவமே வராது. என்னை பற்றி வந்திருக்கும் மீம்ஸுகளை பார்த்து கவலையாக இருக்கிறது.

இப்படி தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு பர்சனல் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. நண்பர்களிடம் நான் விளையாட்டாக சொல்வதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு, ஏன்டா திட்டுற என கேட்டதுண்டு. எல்லாம் என் நேரம். எனக்கு திமிரோ, ஆணவமோ இல்லை என அஸ்வின் கூறியுள்ளார்.