என்னோட கல்யாணம் அவருக்காக மாறியது : குட்டி ஸ்டோரி சொன்ன முதலமைச்சர்

M K Stalin
By Irumporai May 26, 2022 08:15 AM GMT
Report

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

காமராஜர் மாநகராட்சி மண்டபத்தில் நடந்த இந்த திருமண விழாவில் புதுமண தம்பதியருக்கு முதலமைச்சர் சார்பில் தங்கத் தாலி, பீரோ, கட்டில், மிக்ஸி, அடுப்பு உள்ளிட்ட 33 பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது

இந்த திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது திருமணத்திற்கு காமராஜர் வருவதற்காக திருமண மண்டபமே மாற்றி அமைக்கப்பட்டது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார் .

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நான் முதல் முறை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி ஆய்வு நடத்தியபோது இந்த மண்டபம் சமூக விரோதிகளால் பாழடைந்து கிடந்தது.

காமராசரால் 1966ஆம் ஆண்டு இந்த மண்டபம் திறக்கப்பட்டது. நான் இந்த மண்டபத்தை சீரமைக்கக்கூடாது என அரசியல் காழ்ப்புணர்வால் சிலர் வழக்கு தொடர்ந்தனர். திமுக வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்பு பெற்று குளிர்சாதன வசதிகள், லிப்ட், பார்க்கிங் வசதியுடன் முழுமையாக மண்டபத்தை கட்டி முடித்துள்ளோம். 700 பேர் வரை மண்டபத்தில் அமர முடியும். சீரமைத்த பிறகும் காமராசர் பெயரிலேயே இந்த மண்டபம் இருக்கிறது.

அவர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டும் அப்படியே இருக்கிறது. அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் காமராசர் . கருணாநிதி என் திருமண அழைப்பிதழை காமராசரிடம் கொடுத்தபோது ஸ்டாலின் சுறுசுறுப்பான இளைஞராக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.

என்னோட கல்யாணம் அவருக்காக மாறியது : குட்டி ஸ்டோரி சொன்ன முதலமைச்சர் | My Marriage Hall Changed Minister Stalin

அவரது திருமணத்திற்கு நேரில் வர ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு உடல் நலம் இல்லையே எனக் கூறியிருக்கிறார். உடனே கருணாநிதி , நீங்கள் வருவதாக இருந்தால் திருமண மண்டபத்தையே மாற்றத் தயாராக இருக்கிறேன் என்றார்.

அதன்படி காமராசரின் கார் மணமேடை வரை வருவதற்கு ஏற்றவாறு, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மண்டபத்தில் இல்லாமல், மாற்று மண்டபத்தில் எனக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் கருணாநிதி" என நெகிழ்ச்சிகரமாகப் பேசினார்.

மேலும், மணமக்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின், பாரதிதாசனார் கூறியபடி வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள் என வாழ்த்திப் பேசினார்.