‘‘என் தந்தை கலைஞரின் தீவிரமான பக்தர்" - சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ். பேச்சு
தனது தந்தை கலைஞரின் தீவிர பக்தர் என்றும் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு என சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பி.எஸ் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவிடம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ,50 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி, பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி என ஓபிஎஸ் புகழாரம் சூட்டினார்.
மேலும் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்க கடமைப்பட்டுள்ளோம் என கூறினார். அவரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது என பேரவையில் பேசினார்.
கலைஞர் பற்றிய அனைத்து சிறப்பு அம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை வைப்பதாக கூறினார். மேலும் தனது தந்தை தீவிர கலைஞரின் பக்தர் என்றும் அவருடைய பெட்டியில் எப்போதும் பராசக்தி, மனோகரா பட வசனப் புத்தகம் இருக்கும் என்றும் அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார் என கூறினார்.
தந்தை இல்லாத நேரத்தில் மனோகரா, பராசக்தி கதைகளை எடுத்து நாங்கள் படித்துள்ளோம் என தெரிவித்த ஓ.பி.எஸ் 50 ஆண்டு கால எம்எல்ஏவாக இருந்த கலைஞர் பல சிறப்பு சட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தவர் என பேசினார்.