மாணவர்களை முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ : முதலமைச்சர் ஸ்டாலின்

M K Stalin
By Irumporai May 16, 2022 06:57 AM GMT
Report

சென்னை பல்கலைக் கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழாவில் ஒரே மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றனர்.

இந்தி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து மோதல் நிலவும் நிலையில், ஒரே மேடையில் அமர்ந்தனர். சென்னை பல்கலைக் கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

அப்போது பட்டளிப்பு விழாவில்பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் :

தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு உதவியவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக் கழகம்.

திமுக அரசு மாணவர்களுக்கான அரசு என்று சொல்லி கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அரசு. நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் மாணவர்கள் நலன் கருதி உதவித்தொகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது. திருநங்கைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் பல்கலை. செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது.

உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏழை மாணவர்கள் பயன்பெற ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றன. வேலைக்கு தகுந்தாற்போல இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று பல்வேறு நிறுவனங்கள் கூறுகின்றன.

அனைத்து மாணவர்களையும் முதல்வனாக உருவாக்க செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் முதல்வன் திட்டம். வேலைகள் இருக்கின்றன, திறன் குறைவாக இருக்கிறது; இதனை சரி செய்யவே நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் அடுத்தடுத்த உயர்வுக்கு பட்டம் என்பது ஒரு அடித்தளம்.

படிப்பு இறுதிவரை தொடர வேண்டும். மாணவர்களின் திறமை, தகுதிக்கேற்ப எதிர்காலம் நிச்சயம் அமையும் என நம்பிக்கை உள்ளது.

பெற்றோர்களின் எண்ணங்களை மாணவர்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள். தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.