செந்தில் பாலாஜி மாற்றம் - புதிய பொறுப்பு அமைச்சராக முத்துசாமி !
கோவை மாவட்ட புதிய பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மாற்றம்
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மீதான வழக்குகளும் தற்போது நீதிமன்றங்களில் நடைபெற்றுவருகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த அவரை மாற்றி புதிய அமைச்சராக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமியை நியமனம் செய்து அரசாணையை வெளியிட்டுள்ளார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.
புதிய பொறுப்பு அமைச்சர்கள்
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு அமைச்சர்கள் சிலர் சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு மாவட்ட வளர்ச்சிப் பணிகளை செய்தல், மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணித்தல், நோய் மற்றும் அவசரகால பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்காக மாவட்ட வாரியாக புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.