கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை : கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் அமைத்து வியாபாரம் நடத்த தடை
கர்நாடகாவில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் அமைத்து வியாபாரம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாநிலத்தின் பிரசித்திபெற்ற ஹோசா மர்குடி கோயில் திருவிழாவில் இத்தனை ஆண்டுகள் ஹிந்துக்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் கடைகள் அமைத்து பொருட்கள் விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான சிறுதொழில் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தடையினால் பாதிக்கப்பட்ட வியாபாரி ஒருவர் கூறுகையில், “ இந்த தடை குறித்து கோயில் குழுவை சேர்ந்த அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்தோம். அப்போது அவர்கள் இந்துக்களுக்கு மட்டுமே இனிமேல் இடங்களை ஏலம் விடுவோம்.
நீங்கள் இதற்கு ஒத்துழைத்துதான் ஆக வேண்டும் என்று கூறுவிட்டார்கள். மேலும் அவர்கள் சில வலதுசாரி அமைப்புகளால் அழுத்தம் தரப்பட்டது என்றும் அதன் பின்னரே ஆலோசனை நடத்தப்பட்டு இந்த முடிவுக்கு வந்ததாகவும் கூறினர்.” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் ஹிஜாப் விவகாரத்தால் அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கும் அளவிற்கு ஹிந்து-முஸ்லிம் ஹிஜாப் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.
அதனை தொடர்ந்து தற்போது ஹிந்து கோயில்களில் பல வருடங்களாக சுமூகமாக பிழைப்பு நடத்தி வந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ஹிஜாப் சர்ச்சையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பந்த்’தில் ஈடுப்பட்டதற்காக, வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளதால் கர்நாடக மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்துள்ளது.
அப்போது பேசிய கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் மதுசுவாமி, “இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு ஒருபோதும் ஆதரிக்காது.
முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும் கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளார்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை அரசு உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.