'இறைவன் என்பவன் ஒருவனே, அனைவருக்கும் ரத்தம் சிவப்பு நிறம் தான்' - விநாயகருக்கு கோவில் கட்டிய முஸ்லிம் நபர்
பல சர்ச்சை நிகழ்வுகளுக்கு மத்தியில் முஸ்லிம் நபர் ஒருவர் இந்து கடவுளுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் கல்வி கற்கும் நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது, கோவில்களில் முஸ்லிம்கள் கடை வைக்க எதிர்ப்பு, ஹலால் இறைச்சிகளை விற்க கூடாது என கர்நாடகாவில் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கர்நாடகத்தில் முஸ்லிம் ஒருவர் விநாயகருக்கு கோவில் கட்டி பூஜை செய்யும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் சிக்கஹோல் மற்றும் சுவர்ணாவதி அணைகட்டுகளின் மதகுகளை திறக்கும் ஊழியராக பணி செய்து வருபவர் பி.ரகுமான். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் சிக்கஹோல் அணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ரகுமான் தனது சொந்த செலவில் விநாயகர் சிலை நிறுவி கோவில் கட்டி அத்துடன் விநாயகருக்கு பூஜை செய்ய பூசாரியையும் நியமித்தார்.
அதன்படி விநாயகருக்கு வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடத்தப்படுகிறது. மேலும், இந்த பூஜையில் ரகுமான் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இது குறித்து ரகுமான் கூறுகையில், “சிலை திருடுச்செல்லப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் என் கனவில் இறைவன் தோன்றி எனக்கு கோவில் கட்டு என சொல்வது போல் இருந்தது. உடனே நான் விநாயகருக்கு கோவில் கட்ட நினைத்தேன்.
மேலும், ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுகின்றனர். ஆனால் இறைவன் என்பவன் ஒருவனே. அனைவருக்கும் ரத்தம் சிவப்பு நிறத்தில் தான் ஓடுகிறது. இறைவன் ஒருவனே என்பதால் விநாயகரையும் நான் வழிபடுகிறேன். நான் நீண்ட காலமாக விநாயகரை வழிப்பட்டு வருகிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்றார்.
மத நல்லினக்கத்தை வெளிப்படுத்தும் ரகுமானின் இந்த செயலுக்கு மக்கள் வெகுவாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.