வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது - ஜவாஹிருல்லா அறிவிப்பு

Notice M. H. Jawahirullah Fatima Shaik Award பாத்திமா ஷேக் விருது
By Nandhini Feb 09, 2022 07:24 AM GMT
Report

வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியில் உள்ள பள்ளியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மாண்டியாவில் உள்ள பி.எஸ் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த காவி துண்டு அணிந்த மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு கிளர்ச்சி செய்தனர்.

அதோடு, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு, அப்பெண்ணை அவர்கள் பின் தொடர்ந்து வந்தனர். ஆனால், மாணவி முஸ்கான் பதிலுக்கு அல்லாஹு அக்பர் என்று ஆவேசமாக கோஷம் எழுப்பி வகுப்பறையை நோக்கி நடந்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தன் பக்கத்தில், "அரசியல் சாசனம் வழங்கிய உரிமையை பறிக்க நினைத்த காலிகளுக்கு எதிராக, ஓர் இந்தியக் குடிமகளின் உரிமையை, அஞ்சாமல் நிலைநாட்டிய, மாணவி முஸ்கான் அவர்களுக்கு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்வி போராளி "பாத்திமா ஷேக் விருது" வழங்கப்படும் என்று பெருமையோடு அறிவிக்கின்றோம்.

முஸ்கான் கான் ஹிஜாபோடு கல்லூரியில் நுழையவிடாமல் தடுத்து கலாட்டா செய்ய முயன்ற பயங்கரவாதிகளுக்கு கிஞ்சிற்றும் அஞ்சாமல் அல்லாஹு அக்பர் ( அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓங்கி முழங்கி, மா வீரத்தோடு அவர்களை கடந்து தனது கல்வி நிறுவனத்தின் உள்ளே நுழைந்த அந்த வீரத்திற்காக இந்த விருது. ஜோதிராவ் பூலே - சாவிததிரி பூலே தம்பதிகள் பெண்கள் கல்விக்காக பாடுபட்டவர்கள்.

பெண்களுக்கு கல்வி அளிக்க கூடாது என்று ஆதிக்க சாதியினர் மிரட்டினர். இதனால் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு தனது வீட்டை அளித்து அங்கு பள்ளிக்கூடம் தொடங்க உதவியவர் பாத்திமா சேக்கும் அவரது சகோதரரும். முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்று பாத்திமா சேக்கும் இந்த பணியில் ஈடுப்பட்டார். ஆசிரியர் பயிற்சி பெற்ற முதல் முஸ்லிம் பெண் பாத்திமா சேக்." என்று பதிவிட்டுள்ளார்.