வெடித்து சிதறிய காரின் டயர்...சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரபல இசையமைப்பாளர்
சாலை விபத்தில் சிக்கி பிரபல இசையமைப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தஷி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட தஷி என்ற சிவகுமார் மலையாள மொழியில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வந்துள்ளார். சிவக்குமார் என தன்னுடைய இயற் பெயரை திரை துறைக்காக தஷி என மாறிக்கொண்ட இவர், இசையின் மீது இருந்த ஆசையால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான குருவான நித்யானந்தம் என்பவரிடம் கீபோர்டு இசைக்க கற்றுக்கொண்டார்.
பின்னர் மலையாள திரையுலகில் நுழைந்த இவர், தந்த்ரா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் 60-ற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசைமைத்துள்ள இவர், தமிழில் ஒத்த வீட, ஆடவர், சாதனை பயணம் போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
திடீர் கார் விபத்து
இந்த நிலையில் இசையமைப்பாளர் தஷி நேற்று ரியல் எஸ்டேட் விஷயமாக தனது நண்பர்களுடன் கேரளாவிற்கு சென்று விட்டு பின்னர் சென்னை திரும்பியிருந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவினாசி, பழக்கரை பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, தடுப்பு சுவர் மீது பலமாக மோதி உள்ளது.
இந்த எதிர்பாராத விபத்தில் இசையமைப்பாளர் தஷியும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் காரில் பயணித்த மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென ஏற்பட்ட இசையமைப்பாளர் தஷியின் மறைவிற்கு திரை துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.