தமிழகத்தை உலுக்கிய ஆணவக் கொலை! பெண்ணின் அண்ணனை சாகும் வரை தூக்கிலிட உத்தரவு
2003ஆம் ஆண்டு சாதிமாறித் திருமணம் செய்துகொண்ட முருகேசன், கண்ணகி கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் - கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு சென்றனர்.
எனினும் கோபம் தணியாத பெற்றோர்கள் இருவரையும், புதுக்கூரைப்பேட்டை முந்திரி தோப்பில் வைத்து விஷம் கொடுத்து எரித்துக் கொன்றனர்.
இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில், கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது, அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்ணின் அண்ணனான மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.