மக்கள் நீதி மய்யம் கட்சியில் சர்வாதிகாரம் தலைத் தூக்கி விட்டது: பரபரப்பு குற்றச்சாட்டு
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய பொதுச்செயலாளர் முருகானந்தம் அக்கட்சியின் தலைமை குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன், கமீலா நாசர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதி வேட்பாளர் பத்மபிரியா உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரும் கடந்த தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டவருமான முருகானந்தம் இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தலில் எந்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததே தேர்தலில் தோல்வியடைய காரணம் என தெரிவித்தார்.
மேலும் கட்சியின் தலைமை சரியாக இல்லை என்றும், கட்சித் தலைவர் கமல் தன்னுடைய புகழுக்காக செயல்படுகிறாரோ என்கிற சந்தேகம் தனக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சர்வாதிகாரம் தலைத் தூக்கி ஜனநாயகம் அற்றுப்போய் விட்டதாக குற்றம் சாட்டினார்.