திருச்செந்தூர் கோவிலில் இந்திக் கல்வெட்டா?: வைகோ கண்டனம்

hindi language temple vaiko murugan
By Praveen Apr 29, 2021 03:40 PM GMT
Report

 திருச்செந்தூர் முருகன் கோவிலில் இந்தியில் கல்வெட்டு இருப்பது குறித்து வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரில், தமிழ்க் கடவுள் முருகனின் ஆலயத்தில், திடீரென இந்திக் கல்வெட்டுகள் முளைத்துள்ளதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்தியால், உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கொதித்துப் போயிருக்கின்றார்கள்.

கொதிநிலையை அறிவதற்கு, குரங்கு தன் குட்டியின் கையை எடுத்துச் சுடும் நீரில் வைத்துப் பார்ப்பது போல, ஆதிக்க உணர்ச்சிக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று பார்க்க, இந்தக் கல்வெட்டு மோ(ச)டி வித்தையை, அரங்கேற்றி உள்ளனர்.

இதை யார் வைத்தார்கள், எப்போது வைத்தார்கள், என்ன நோக்கத்திற்கhக வைத்தார்கள்? இந்தி ஆதிக்க சக்திகள் நடத்தும் கொல்லைப்புற ஏற்பாடுகளுக்கு, எந்தவிதத்திலும் தமிழ்நாட்டு அரசு இம்மி அளவும் இடம் தரக் கூடாது. திருச்செந்தூருக்கும், வட ஆரியத்திற்கு எந்தக் கhலத்திலும் எந்தத் தொடர்பும் இல்லை.

இத்தகைய கல்வெட்டுகளுக்கு இடம் அளித்து, எதிர்கhலத்தில் வரலாறைத் திரித்துக் கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடக் கூடாது. தமிழ்நாட்டில், 1938 இல் தொடங்கிய மொழிப்போர்க் கனல், நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், தலைவர் கலைஞரும் போர்க்கொடி ஏந்திய உணர்வு கொஞ்சமும் மங்கி விடாமல், மானம் உள்ள தமிழ்மக்கள் இன்றைக்கும் போர்க்களம் புகுவதற்குத் துடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதற்கு முன்பாக, ஆட்சியாளர்கள், அந்தக் கல்வெட்டுகளை உடனே அகற்ற வேண்டும்; திருச்சீர் அலை வாய் என்று போற்றப்படும் செந்தில் ஆண்டவனின் சன்னிதியில், இந்திக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

வேல் ஏந்தி, சூரனை வதைத்துக் கோவில் கொண்டு இருக்கின்ற செந்தூர் ஆண்டவன் கோவிலுக்கு, மக்கள் கhல்நடையாகவே வந்து வணங்கி வழிபட்டு, தமிழர் பண்பாட்டையும், மரபையும் பேணிக் கhத்த மண்ணில், இந்தியைத் திணிக்க முயல்வதை, நொடிப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள்தான் ஆட்சி மொழிகள் என, பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 ஆம் ஆண்டு, சட்டம் இயற்றினார்கள்.

அதை இனி யாராலும் மாற்ற முடியாது என்றும் உறுதிபட அறிவித்தார்கள். அந்தச் சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. அதன்படி, அந்தக் கல்வெட்டுக்கு அங்கே இடம் கிடையாது. எனவே, அவற்றை அகற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை அதனால் உடனடியாக அகற்றுங்கள் என வைகோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.