முருகன், கண்ணகி ஆணவ கொலை.. கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - கொலையின் பிண்ணனி என்ன?

Cuddalore Pudukottai HonourKilling
By Irumporai Sep 24, 2021 08:06 AM GMT
Report

விருத்தாசலம் அருகே கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் ஆணவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தாழ்த்தபட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர், பி.இ. பட்டதாரியாவார். இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தை சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி(22) என்பவரை காதலித்து வந்தார்.

இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் இருவரும் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

முருகன், கண்ணகி ஆணவ கொலை.. கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - கொலையின் பிண்ணனி என்ன? | Murugan Kannaki Arson Cuddalore Court

கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவரவே முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர்.

பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர். சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.


இதனையடுத்து, இந்த வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது.

அதன்படி கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 13 பேர் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதிகள், இந்த செயல் காட்டுமிரண்டித்தனமானது. காவலர்களும் இதில் உடந்தையாக இருந்தது வேதனை அளிக்கிறது என்று வேதனை தெரிவித்தனர்.

முக்கிய குற்றவாளியான பெண்ணின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் பெண்ணின் தந்தை உள்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் அப்போதைய விருதாச்சலம் எஸ்.ஐ. தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தனர்.