அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி உறுதியான கூட்டணி: எல்.முருகன் திட்டவட்டம்

election tamilnadu dmk
By Jon Jan 29, 2021 04:44 PM GMT
Report

அதிமுக - பாஜக கூட்டணிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் அதிமுக உடனான தங்களுடைய கூட்டணி உறுதியான கூட்டணி என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக - பாஜக தொடர்வதை உறுதிபடுத்தியுள்ளார்.

தொழில் அதிபர்கள் ஸ்ரீவித்யா, முத்துக்குமார், எழுத்தாளர் லதா ஆகியோர் நேற்று சென்னை கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டனர்.

அவர்களுக்கு பா.ஜ.க. தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர்கள் அண்ணாமலை, வி.பி.துரைசாமி, நடிகை குஷ்பூ, மாநில ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்பின்பு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-மதுரையில் 30-ந் தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதன்பின்பு, 31-ந் தேதி அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி.

இந்த கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. தற்போது வரை கூட்டணி தொடர்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் பிளவு ஏற்படலாம் என்ற நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.