பேஸ்புக் காதலால் 3 உயிர்கள் பலியான பரிதாபம்
கேரளாவில் இளம்பெண்களின் விளையாட்டுத் தனமான நடவடிக்கை யால் 3 உயிர்கள் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள கல்லுவாதுக்கல் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை ஒன்று புதருக்குள் கிடந்துள்ளது. இதை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் குழந்தை கிடந்த இடத்திற்கு அருகே இருந்தவர்களின் டி.என்.ஏக்கள் பரிசோதனை செய்தனர். இதில் ரேஷ்மா என்ற பெண்ணின் டி.என்.ஏ, குழந்தையின் டி.என்.ஏ வுடன் ஒத்துபோனது.
இதையடுத்து ரேஷ்மாவை கைது செய்த காவல்துறையினர், விசாரணையை தொடங்கினர். ரேஷ்மாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அனந்து என்ற பெயரில் இருக்கும் பேஸ்புக் நபருடன் காதலில் விழுந்துள்ளார். இதற்காக கருவுற்றிருந்த ரேஷ்மா குழந்தை பெற்றால் மட்டுமே தன்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என அனந்து கூறியுள்ளார்.
இதற்காக பெற்ற குழந்தையை கொலை செய்து ரேஷ்மா ரப்பர் தோட்டத்தில் வீசியுள்ளார். பேஸ்புக் நண்பரான அனந்து யார் என்பதை போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
ரேஷ்மாவிடம் பேஸ்புக் மூலமாக பழகி வந்தது அவரது உறவுக்கார பெண்களான ஆர்யா மற்றும் கிரீஷ்மா எனத் தெரிய வந்தது.டைம் பாஸ் செய்வதற்காக ரேஷ்மாவுடன் இரு பெண்களும் விளையாட்டாக ஆண் நண்பரைப்போல பழகியிருந்துள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டது. ஆனால் காவல்துறையினர் தங்களை கைது செய்ய வருவதையறிந்த ஆர்யாவும், கிரீஷ்மாவும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். குழந்தை உயிரிழந்த வழக்கில் அடுத்தடுத்த அரங்கேறிய சம்பவங்கள்தான் கேரளாவில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.