மாமாவுக்கு திதி கொடுப்பதில் தகராறு - அத்தையை கொன்ற மருமகன்
தூத்துக்குடி அருகே மாமாவுக்கு திதி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் அத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி செல்வமுருகன் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து இவரின் மனைவி அருணா தனது பிள்ளைகளுடன் உடன்குடியில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் கழிவறையில் அருணா கழுத்தறுத்து மர்மமான கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் செல்வமுருகனின் அக்கா மகன் முத்துக்குமார் அவருக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்க வேண்டும் என்பது குறித்து அருணாவிடம் பேசியதாகவும், அதற்கு அருணா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தன் மகன்களை வைத்து திதி கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், தனது அத்தை அருணாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.