காதலனை மறக்காத மனைவியை நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவன் கைது
திருமணமாகியும் காதலனை மறக்காததால் நடுரோட்டில் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (20). இவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த கண்ணன் (38) என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கண்ணன் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால், முதல் மனைவி கண்ணனை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதனையடுத்து, அவர் கஸ்தூரி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தம்பதி இருவருக்குள்ளும் ஆரம்பத்திலிருந்தே சண்டைகள் வரும். இதனால், கஸ்தூரி அடிக்கடி கோபித்துக் கொண்டு கீழப்புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விடுவார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார் கஸ்தூரி. அவரை அழைத்து வருவதற்காக சனிக்கிழமை அன்று மனைவியின் பாட்டி வீட்டிற்கு சென்றிருக்கிறார் கண்ணன். கஸ்தூரி வேலைக்கு சென்றிருக்கிறாள். திரும்பி வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன் என்று பாட்டி கூறியுள்ளார்.
சிறிது நேரம் காத்திருந்த கண்ணன் பின்னர் புறப்பட்டு, புளியரை சாலையில், 2 லாரிகளுக்குப் பின்னால் பைக்கில் பதுங்கி இருந்திருக்கிறார். வேலை முடித்து விட்டு கஸ்தூரி அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பைக்கால் மோதி கீழே தள்ளிய கண்ணன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக கழுத்திலேயே வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தாள். உடனே கண்ணன் பைக்கிலிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து, புளியங்குடி போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கஸ்தூரி தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவரை காதலித்திருக்கிறார். அந்த இளைஞருக்கு திருமணம் முடிந்து விட்டது. ஆனாலும், கஸ்தூரியால் அந்த இளைஞனை மறக்க முடியவில்லை.
இதனையடுத்து, கஸ்தூரிக்கு, கண்ணனுடன் திருமணம் ஆனது. ஆனால், கஸ்தூரிக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. தான் தனது பழைய காதலனுடன் வாழப் போவதாக கஸ்தூரி அடம்பிடித்துள்ளார். முதல் மனைவி விட்டுப் போனதுபோல் நீயும் போய் விடாதே என கண்ணன் கெஞ்ச, தம்பதி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
சண்டையில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த கண்ணன் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து கண்ணனைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.