துடிக்க துடிக்க தொழிலதிபரின் கழுத்தை அறுத்து, கத்திமுனையில் 100 சவரன் கொள்ளை - அதிர்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் முகமது நிஜாம். இவர் ரியல் எஸ்டேட், ஆப்டிகல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஆயிஷா பேபி. இத்தம்பதிகளுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இரண்டு பேரும் வெளிநாட்டில் ஆப்டிகல்ஸ் கடையை நிர்வகித்து வருகிறார்கள். மகளுக்கு திருமணமாகிவிட்டது.
இதனால், முகமது நிஜாம் மற்றும் ஆயிஷா பேபி இருவரும் தனியே அறந்தாங்கி ஆவுடையார் பட்டினத்தில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு ரமலான் நோன்பு இருந்து, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தவர் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் நிஜாம் அருகே வந்தனர். அவர்கள் 3 பேரும் அருகில் வந்ததும் திடுக்கிட்ட நிஜாம் அவர்கள் யாரென்று அறிவதற்குள், அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நிஜாம் கழுத்தை அறுத்தனர்.
ரத்த வெள்ளத்தில் நிஜாம் சரிந்து கீழே விழ, அந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அந்த மர்ம நபர்கள் நிஜாமின் மனைவி ஆயிஷா பேபியை கட்டிப்போட்டனர்.
அவரிடமிருந்து பீரோ சாவியை வாங்கி, 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி ஓடினர். இதன் பின் ஆயிஷாவின் அலறி கத்தி கூச்சல் போட்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த நிஜாம் துடிதுடித்து அங்கேயே இறந்து போனார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
வீட்டிற்குள் சென்ற அக்கம், பக்கத்தினர் ஆயிஷா பேபியை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகமது நிஜாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொழிலதிபரை கொலை செய்து 100 சவரன் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.