சசிகலா யாரென்று தெரியுமா? முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்கள் உள்ளது. இதனையடுத்து அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக களத்தில் இறங்குகின்றன. அதிமுகவுக்கு இந்த தேர்தலில் பெரிய இடியாக இருப்பார் சசிகலா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீரென அவர் அரசியலிலிருந்து ஒதுங்க போவதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில், கே.பி. முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் ஒருவரை எதிர்த்து தேர்தல் களத்தில் இறங்குகிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் முருகன், கே.பி. முனுசாமியால் 30 சதவீதம் கூட வாக்குகள் வாங்க முடியவில்லை என்பதை ஜெயலலிதா தெரிந்து கொண்டுதான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் என்று பேசினார்.
இந்த பேச்சை கேட்டு அதிர்ந்து போனார் கே.பி. முனுசாமி. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கூறியதாவது, “முருகன் வரலாறு தெரியாமல் பேசியுள்ளார். பொய் சொல்லி வாக்கு கேட்கக் கூடாது. தப்பான விஷயங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி தன்னை சங்கடப்படுத்துகிறார். நான் பேச ஆரம்பித்தால், நீங்கள் தாங்க மாட்டீர்கள்.
நான் நேராக மேடைக்கு வந்து பேசுவேன். அந்த மாதிரி ஆளு நான். நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள்; தவறாக பேசாதீர்கள். சசிகலாவை ஏன் எதிர்க்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? அன்று என்னை எதிர்த்த பொம்பள அவ தான். நான் அமைச்சராக கூடாது என அம்மாவிடம் சண்டை போட்டார்.

என் 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் யாரிடமும் ஒரு பைசா கூட கையேந்தியது கிடையாது. சசிகலாவுக்கும் எனக்கும் கடும் போட்டி இருந்து வந்தது. அந்த போட்டியில் அவங்க ஜெயிச்சாங்க. நான் தோற்று போனேன். ஆனா அம்மா என் பக்கம் இருந்தார். அம்மா என்னை விடவில்லை. எனக்கு சீட்டு கொடுத்தார்.
என் மீது பாசமாக இருந்தார். 2016ல் அம்மா எனக்கு வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட சீட்டு கொடுத்தார்.
ஆனால் நான் வெற்றி பெற்று விடுவேன் என்று நினைத்த சசிகலா என்னை பென்னாகரம் தொகுதிக்கு மாற்றினார் என்று பேசினார்.