ராணிப்பேட்டை மாவட்டம் வாக்குப்பதிவு துவங்கியது
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 411 வாக்குச்சாவடி மையங்களில் 7 மணி அளவில் வாக்கு பதிவு துவங்கியுள்ளது.
இந்நிலையில், அதற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு தற்போது துவங்கியது. இதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னிறுத்தி அவர்களுக்கு முன்னதாக அதிகாரிகள் மின்னணு வாக்கு இயந்திரம் சரியான முறையில் வேலை செய்கிறதா என்று சோதித்துப் பார்க்கும் மாதிரி வாக்கு பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 228 பதவிகளுக்கு நடைபெறும் இந்த நகர்ப்புற தேர்தலில் 6 நபர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். எஞ்சியுள்ள 282 பதவிகளுக்கு 1071 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நடைபெறுகின்ற தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3,31,284 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 411 வாக்குப்பதிவு மையங்களும் 496 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.
1823 ஆசிரியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் 52 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களும் 23 மிக பதட்டமான வாக்குச்சாவடி மையங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் தீபா சத்யா தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குகளை 100 சதவீதம் செலுத்த முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.