ரசீது கேட்டது ஒரு குத்தமா? இளைஞரை தாக்கிய நகராட்சி ஊழியர்கள் - கொந்தளிக்கும் பொதுமக்கள்
காரைக்குடியில் ஆதார் கார்டு பதிவிற்கு பணம் செலுத்திய இளைஞருக்கு ரசீது தராமல் நகராட்சி பெண், மற்றும் சக ஆண் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரசீது கேட்ட இளைஞர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் செயல்பட்டு வரும் ஆதார் நிரந்தர பதிவு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் புதிய ஆதார் கார்டு எடுப்பது, பெயர் மாற்றுவது, திருத்தம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டது.
கரைக்குடியைச் அடுத்த பலவான்குடியைச் சேர்ந்த ஹரி என்ற இளைஞர் தனது தங்கைக்கு புதியதாக ஆதார் அட்டை எடுப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
கருவிழி, கைரேகை பதிவு முடிந்தவுடன் பணியில் இருந்த தற்காலிக பெண் ஊழியர் ரூ.120 பெற்றுள்ளார். பணம் கட்டியதும் அதற்கான ரசீதை வழங்காமல் பெண் ஊழியர் சண்முக ப்ரியா தனது ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இளைஞரை தாக்கிய நகராட்சி ஊழியர்கள்
காலை 11 மணிக்கு ரசீது கேட்டவரை மதியம் சுமார் 1.30 மணி வரையில் காத்திருக்க வைத்துள்ளார் பெண் ஊழியர் சண்முக ப்ரியா.
இதையடுத்து இளைஞர் ஹரி தனது செல்போனில் கேமராவை ஆன் செய்து வைத்துக் கொண்டு ஹேண்ட் பேக்கிலிருந்த ரசீதை எடுப்பதற்காக சென்ற போது இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட பெண் ஊழியர் தன் காலுக்கு அருகில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கை மறைத்தார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த கோகுல் என்ற ஊழியர் இளைஞர் ஹரியை தாக்கும் போது சண்முக ப்ரியா செல்போனை பறிக்க முயன்றார்.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் ஹரிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதையடுத்து ஹரி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நகராட்சி அலுவலகம் சென்ற போலீசார், பெண் ஊழியர் மறைத்து வைத்திருந்த ரசீதை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதார் அட்டை எடுக்க பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களை இது போன்ற தற்காலிக ஊழியர் தரக்குறைவாகவும், நீண்ட நேரம் காக்க வைக்கும் சூழலும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது எனவே தமிழக அரசு இது போன்ற தற்காலிக ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.