மேலும் ஓர் நிர்பயா சம்பவம்- மும்பையில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை
டெல்லி நிர்பயா சம்பவம் போன்று மும்பையில் 34 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஒருவர் பிடிபட்டுள்ள நிலையில், மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மும்பை புறநகர் பகுதியான அந்தேரி சாக்கி நாக பகுதியில் 34 வயதான பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, அங்கு விரைந்த போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடல் உறுப்புக்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேன் ஒன்றில் ரத்த கறைகள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இதன் மூலம் அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனையிலும் இதனை உறுதி செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர்.
அதன்படி சந்தேகத்தின் பெயரில் மோகன் சவுகான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
தற்போது அதே பாணியில் மும்பையிலும் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.