சிகரெட், மதுபானம் கேட்டு போலீசாரிடம் அடம் பிடிக்கும் மும்பை பெண் - என்ன காரணம்?

mumbaiwomanarrest stealingjewelery
By Petchi Avudaiappan Apr 16, 2022 05:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

சென்னையில் அரசு மருத்துவரிடம் நகை திருடிய மும்பை பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

பொதுவாக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் முன்பு மருத்துவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி வைத்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் ஒருவர் கழற்றி வைத்திருந்த 2 பவுன் நகை திருட்டு போனது.இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர்  கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது மாடல் உடையில் இருந்த பெண் கைவரிசை காட்டியது கண்டறியப்பட்டது. இதனிடையே சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மாடல் உடை அணிந்த பெண் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவரிடம் விசாரிக்கும் போது இந்தி மொழியில் மட்டும் பேசியுள்ளார். 

அப்போது கடந்த ஆண்டு மாடல் உடை அணிந்த பெண் ஒருவர்தான் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவரின்  நகையை திருடியது போலீசாருக்கு நினைவுக்கு வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். 

மும்பையை சேர்ந்த ஆர்த்திதேவ்நானி என்ற அப்பெண் வடபழனியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. அப்பெண்ணை அந்த லாட்ஜிக்கு அழைத்து சென்று சோதனையிட்ட போது அறையில் ரூ.25 ஆயிரம் பணம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்த போது அறையில் சிகரெட் துகள்களும், காலி மதுபான பாட்டில்களும் அதிகம் இருந்துள்ளது.

இந்நிலையில் ஆர்த்திதேவ்நானி போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் சிகரெட், மதுபானம் கேட்டு தொடர்ந்து அடம்பிடித்தார். இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.