பப்ஜி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் - வீட்டை விட்டு ஓட்டம்
மஹாராஷ்டிராவில் பப்ஜி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்த சிறுவன் வீட்டை விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் "பப்ஜி" மொபைல் கேம் தடை செய்யப்பட்டாலும் பலர் குறுக்கு வழிகளில் இந்த கேமை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். சிலர் இதில் பணத்தை இழக்கும் கதைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஜோகேஷ்வரி என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்துள்ளான்.
அதன் விளைவாக பப்ஜியில் அடையாள அட்டை பெறுவதற்கும், விர்ச்சுவல் கரண்சி பெறுவதற்காகவும், தனது தாயாரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளான்.
இந்த விவகாரம் அவனது பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவனை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டான். இதனையடுத்து காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் சிறுவனை மீட்டு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.