போலி ஆவணங்களை காட்டி மோசடி செய்த உயிர் நண்பன்
மும்பையில் போலி ஆவணங்களை காட்டி மோசடி செய்த உயிர் நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை ஒர்லி பகுதியை சேர்ந்தவர் உமேஷ். அதே பகுதியில் வசிக்கும் ஆதித்யா என்பவரும் 18 ஆண்டுகால நண்பர்கள். இதனால் தனது சொத்துவிவரங்களை உமேஷ் சொல்ல, அதனை அபகரிக்க ஆதித்யா திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சட்டச்சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் திரும்ப கொடுத்து விடுவதாகவும் ஆதித்யா உமேஷிடம் தெரிவித்தார். உமேஷ் தன்னிடம் இருந்த ரு.35 லட்சத்தை உடனே ஆதித்யாவிடம் கொடுத்தார். சில மாதங்கள் கழித்து உமேஷ் பணத்தை திரும்ப கொடுக்கும்படி ஆதித்யாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த ஆதித்யா பேஸ்புக்கில் சட்டச்சிக்கலுக்கு பணம் கேட்ட பெண்ணின் பெயரில் போலி ஐடியை உருவாக்கி அதன் மூலம் உமேஷிடம் ஆதித்யா சாட்டிங் செய்து விரைவில் பணத்தை கொடுத்து விடுவதாக தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் ஆதித்யா ஒரு வன்கொடுமை புகார், தற்கொலை முயற்சி புகார் தொடர்பான போலீஸ் ஆவணங்களை உமேஷிடம் காட்டி, உன் மீது வன்கொடுமை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பயந்து போன உமேஷ் இந்த வழக்கில் தான் கைது செய்யப்பட்டால் கௌரவம் போய்விடும் என்று கருதி பல்வேறு காலக்கட்டங்களில் ஆதித்யாவிடம் 65 லட்சம் ரூபாய் கொடுத்து வழக்கை முடிக்கும் படி தெரிவித்தார். இந்த பணத்தை கொடுப்பதற்காக உமேஷ் தனது வீட்டை விற்பனை செய்துள்ளார். அதோடு தனது காப்பீடு பத்திரத்தை சரண்டர் செய்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் கடன் வாங்கியுள்ளார். அப்படி இருந்தும் ஆதித்யா தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தார்.
ஒருகட்டத்தில் உமேஷை தற்கொலை செய்துக்கொண்டால் பிரச்சனை முடிந்துவிடும் என ஆதித்யா கூற 2 முறை ரயிலில் இருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனாலும் அதில் பிழைக்க கடைசியாக போலீஸ் புகார் குறித்து விசாரிக்க செல்ல அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்..! ஆதித்யா சொன்ன போலீஸ் அதிகாரியின் பெயரை சொல்லி உமேஷ் விசாரித்துள்ளார். ஆனால் அங்கு அது போன்ற ஒரு அதிகாரியே இல்லை என்று தெரிய வந்தது.
அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து ஆதித்யா மீது உமேஷ் போலீசில் புகார் செய்தார். தான் பெரிதும் நம்பிய உயிர் நண்பனே இப்படி மோசடி செய்ததை எண்ணி தான் மிகவும் நொந்து போய்விட்டதாகவும், சொத்துக்களை இழந்து பல நாட்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வேலைக்கு போகாமல் ரயில் நிலையத்திலேயே இருந்து கொண்டிருந்தேன் என்றும் கண்ணீர் ததும்ப உமேஷ் கூறியுள்ளார்.